நாகை மாவட்ட மீனவர் கோரிக்‍கையை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன்

தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் கேட்டு போராடும் நாகை மாவட்ட மீனவர்களின் கோரிக்‍கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சாமந்தான்பேட்டையில், தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் கேட்டு போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மீனவர்களின் நலனுக்காக சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என, சட்டப்பேரவையில் அறிவித்து, 5 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், அம்மா பெயரால் ஆட்சி நடத்துவதாக வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர்களுக்கு இத்திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்? என்றும் திரு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராடும் மீனவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முடியாமல் மீன்வளத் துறையின் அமைச்சர் அப்படி என்ன அதிமுக்கியமான வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்? அம்மா திட்டங்களை, கொள்கைகளை எல்லாம் புறக்கணிக்கிற பழனிசாமி அரசின் செயல்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் - இனி மேலும் தமிழக மக்களையும் அம்மாவின் உண்மைத்தொண்டர்களையும் இவர்களால் ஏமாற்ற முடியாது என்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.