பெண்மையைப் போற்றும் நன்னாள் - டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து

உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்மையைப் போற்றுகின்ற இந்நன்னாளில், மாதர் குலத்திற்கு இனிய மகளிர் தின வாழ்த்துகளை கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண் இனத்தின் வெளிச்சமாக, அவர்களின் நல்வாழ்வுக்‍கு நம்பிக்‍கையூட்டும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் திருப்பெயரைத் தாங்கி நிற்கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், அம்மாவின் வழியில் பெண்களுக்‍காக பாடுபடுவதில் உறுதியோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் பெண்கள் பெற வேண்டும் என்ற பாரதியின் வார்த்தைகளை உண்மையாக்‍கி, சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்‍கி ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து, சிறந்திட இந்த இயக்‍கம் துணை நிற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும் - அத்தகைய மாற்றத்தின் தொடக்‍கமாக நம்முடைய இல்லங்கள் அமையட்டும் - பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவதையும் நாம் அனைவரும் நம்முடைய வீடுகளிலிருந்து தொடங்குவோம் - அன்பின் சிகரங்களாக, தியாகத் தழும்புகளைச் சுமக்‍கிற பெண் குலத்தை ஆண்டின் எல்லா நாட்களிலும் கொண்டாடி மகிழ்வோம் என திரு. டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.