சுங்கச்சாவடி‍ கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் பொதுமக்‍களை, மேலும் கடுமையாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியதற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது, அம்மக்களை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும் என அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.