உயர் அழுத்த மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டத்தில் மின்சாரம் தாக்‍கி பலியான 4 பேர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்‍கு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே தனியார் பேருந்து மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரு.டிடிவி தினகரன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைந்து நலம்பெற பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், இவ்விபத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளார்.