ஆசிரியப் பெருமக்‍களுக்‍கு கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

ஆசிரியர் தினம், இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.​டிடிவி தினகரன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், கல்விகற்கும் மாணவர்களுக்‍கு ஏற்ற சூழலை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதைப்போலவே கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்‍களுக்‍கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைப்பதற்காக உழைக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது& என்று சொன்ன தத்துவமேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் - இந்நாளில் அவரது வார்த்தைகளின் உண்மையான பொருள் உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்;

ஆசிரியர் பணி என்பது வெறுமனே எழுத, படிக்க சொல்லித்தருவது மட்டுமல்ல; ஒழுக்கம், உயர்ந்த பண்புகள், சமூக அக்கறை உட்பட நல்ல மனிதனுக்குத் தேவையான குணங்களையும் மாணவர்கள் மனதில் விதைத்து, வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியப் பெருமக்களுக்கு இருக்கிறது - அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் பெற்றோருக்கு அடுத்த இடத்தில் குருவை வைத்து வணங்க சொல்லித்தந்திருக்கிறார்கள் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சூழலில் பல்வேறு மன அழுத்தங்களுக்கு இடையே தங்களுடைய கடமையை மிகுந்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் செய்து வருவதைப் பார்க்க முடிகிறது - எனவே, கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்ற சூழலை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதைப்போலவே, கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் அத்தகைய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகிறது.

இந்த நல்ல நாளில் தன்னுடைய ஆசிரியர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து, ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.