கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

பண்பாடு, கலாச்சாரம், உணவு என எல்லாவற்றிலும் இயற்கையோடு இணைந்த நம்முடைய பழந்தமிழர் வாழ்க்‍கை​முறையை மீட்டெடுப்பதற்கு, சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுவோம் என, திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய "பிலவ" தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே தொன்மையான தமிழ் மொழியைப் பேசும் மூத்த குடிமக்களான தமிழ் பெருமக்கள், சித்திரை முதல் நாளில் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு, எல்லா வளங்களையும் நலன்களையும் கொண்டு வந்து சேர்த்திடட்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வாழ்க்கை முறையில் சித்திரை என்றாலே தெய்வீக மணம் வீசும் நிகழ்ச்சிகளும், திருவிழாக்களுமாக, மாதம் முழுக்க கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும் - ஆனால் கடந்த ஆண்டைப் போன்றே இப்போது மீண்டும் கொரோனா அச்சம் சூழ்ந்திருக்கிறது - எனவே, உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் இறையருளை வழிபட்டு புத்தாண்டை வரவேற்போம் - பெருந்தொற்று நோய் பயத்திலிருந்து மொத்தமாக மீண்டெழுந்து முழு ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் அனைவரும் வாழ்ந்திட வேண்டுமென வழிபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

பண்பாடு, கலாச்சாரம், உணவு என எல்லாவற்றிலும் இயற்கையோடு இணைந்த நம்முடைய பழந்தமிழர் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்கு, சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திடுவோம் - இந்த புத்தாண்டில் அதற்கான உறுதியினை ஏற்றிடுவோம் - எப்போதும் எல்லோரும் நலமோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட தமிழ் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன் - அதற்காக அன்பு நிறைந்த நெஞ்சத்தோடு பிரார்த்திப்பதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.