பள்ளிகள் திறக்‍கும் விஷயத்தில் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாவது,

பள்ளிகளை திறக்‍கும் விஷயத்தில் மாணவர்கள், பெற்றோரின் மனநிலையை உணர்ந்தே தமிழக அரசு முடிவெடுக்‍க வேண்டும் என்றும், மாணவச் செல்வங்களின் உயிரோடு விளையாடுவது சரியாக இருக்‍காது எனவும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையையும், கொரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதைவிட்டுவிட்டு, 'எடுத்தோம், கவிழ்த்தோம்' என்று பள்ளிகளைத்திறந்து மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது சரியாக இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியகூறுகள் இப்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன அதே நாளில், பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுகிறார் என்றால் நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? என திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த சில மணிநேரங்களில் உகந்த சூழல் ஏற்பட்டுவிட்டதா? மிக முக்கியமான பிரச்சினையில் கூட ஏன் இவ்வளவு குழப்பம்? என்ற கேள்விகள் மக்களிடம் எழுந்திருக்கின்றன - ஆட்சியாளர்கள் இதனைப் புரிந்து நடந்து கொள்வார்களா? என்றும் திரு.டிடிவி தினகரன் வினவியுள்ளார்.