ஆக்‍ஸிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் டிடிவி தினகரன் வேதனை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்‍ஸிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இனி இப்படியொரு நிகழ்வு நடக்‍காதவாறு நடவடிக்‍கை எடுக்‍கவும், இழப்பீடு வழங்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்‍கொண்டுள்ளார். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழக அரசு நிர்வாகம் இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.