ஊரடங்கில் அம்மா உணவகங்களில் உணவு வழங்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழக முழு ஊரடங்கால் ஏழை-எளியோர் பாதிக்‍காமல் இருக்‍க, அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் கட்டணமின்றி உணவு வழங்க வேண்டுமென, தமிழக அரசை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கிற முழு ஊரடங்கால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்கள் பசியால் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் கட்டணமின்றி தமிழக அரசு உணவு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு இன்றும் நாளையும் மட்டுமே இருப்பதால், சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். மேலும், கடந்தமுறை போல அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் குவிவதைத் தடுப்பதற்கு, முறையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திரு.டிடிவி தினகரன், கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுப்பதற்கு முறையாக கண்காணிப்பினை மேற்கொள்வதும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.