தனி நுழைவு தேர்வு நடத்துவது மாநில உரிமைகளை நசுக்கும் செயல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவப்படிப்புக்கு தனி நுழைவு தேர்வு நடத்துவதற்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற மத்திய அரசின் செயல்கள், மாநில உரிமைகளை நசுக்கும் நடவடிக்கை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு நடத்துவது ஏற்புடையதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு மூலம் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை தன்னிச்சையாக பங்கு போட்டு கொடுக்கும் மத்திய அரசு, இதில் மட்டும் இப்படி ஓர் ஏற்பாட்டினை செய்வது கொஞ்சமும் நியாயமற்றது என திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

மாநில உரிமைகளை நசுக்கி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முடிவுகள் வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் எனவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.