மாற்று திறனாளி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

அரசு அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களை, தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள் என சுட்டிக்‍காட்டியுள்ளார். கடவுளின் குழந்தைகளான அவர்களிடமும் ஆதாயமடைவது பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.