மருத்துவக்‍கல்லூரி மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் அரசுக்கு கண்டனம்

அரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை, விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று கோரி போராடி வரும் மருத்துவ மாணவர்களை, விடுதிகளைவிட்டு வெளியேற்றுவதற்காக, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியவை என தெரிவித்துள்ளார்.

நியாயமான கோரிக்கைக்காக போராடும் மருத்துவ மாணவர்களை, அதிகாரத்தை வைத்து மிரட்டுகிற தமிழக அரசின் மனசாட்சியற்ற செயலை ஏற்க முடியாது என்றும், உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.