மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் அவர்கள் எச்சரிக்கை
மக்களின் செல்வங்களை சுரண்டக் காத்திருக்கும் தீய சக்தியான திமுகவும், துரோகிகளான அதிமுகவினரும் ஆட்சிக்கு வருவதைத் தடுத்து, உண்மையான மக்கள் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என டெல்டா பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் தீயசக்தி மற்றும் துரோக சக்திகளை தோற்கடித்து, மாண்புமிகு அம்மாவின் உண்மையான நல்லாட்சியை ஏற்படுத்திட, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவு கேட்டு, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், கடந்த 16 ஆம் தேதிமுதல் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில், கும்பகோணத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களிடையே நேற்று எழுச்சியுரையாற்றினார். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. பாலமுருகன், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி வேட்பாளர் திரு. குடந்தை அரசன் ஆகியோரை ஆதரித்து திரு. டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்.
தமிழக மக்களின் செல்வங்களை சூறையாடக் காத்திருக்கும் தீய சக்தியான திமுகவுக்கும் துரோகிகளான அதிமுகவினருக்கும் தக்க பாடம் புகட்டி, மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் அமைப்பதற்கு தர்மசக்தியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கும்பகோணம் பிரச்சாரத்தை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. செந்தமிழனுக்கு, திருவாலங்காடு பகுதியில் ஆதரவு திரட்டிய கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், வெற்றிச் சின்னமான குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கோமல் அன்பரசனை ஆதரித்து, மயிலாடுதுறையில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே திரு. டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் காப்பதற்கும், படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து, மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என திரு. டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார். சீர்காழி தொகுதி கழக வேட்பாளர் திரு. பொன் பாலுவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் திருமதி.மஞ்சுலா சந்திரமோகன், கீழ்வேலூர் தொகுதி கழக வேட்பாளர் திரு.நீதிமோகன், வேதாரண்யம் கழக வேட்பாளர் திரு.பி.எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது, தஞ்சை - நாகை 4 வழிச்சாலை அமைக்கப்படும் - மீனவர்கள் வாங்கிய வங்கிக்கடன் ரத்து செய்யப்படும் - வெட்டாறில் தடுப்பணை அமைக்கப்படும் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.