காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்‍க வேண்டும்

காவிரி டெல்டாவில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்‍க வேண்டும் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரப்பதத்தைக் காரணம் காட்டி விவசாயிகளை இழுத்தடிக்காமல், நெல் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், டெல்டா பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லினைக் கொள்முதல் செய்வதற்குப் போதுமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திறந்திருக்கும் சில கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி இழுத்தடிப்பு செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் திடீர் மழையால் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முளைக்கிற பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளதாக திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார். 

கொரோனா காலத்தில் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு இடையில் விளைவித்திருக்கிற நெல், தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் வீணாகிப்போவது மிகுந்த வேதனை அளிப்பதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 'நெல் கொள்முதல் சரியாக நடக்கிறது' என்று ஆட்சியாளர்கள் வெறுமனே பேட்டி கொடுத்துவிட்டால் மட்டும் விவசாயிகளின் கஷ்டம் தீர்ந்துவிடாது என அவர் விமர்சித்துள்ளார். எனவே, நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகம் திறப்பதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தின் அளவையும் அதிகப்படுத்திட தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளைக் நாட்கணக்கில் காத்திருக்க வைக்காமல், நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டுமெனவும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.