துணைவேந்தர் தன்னிச்சையாக செயல்படுவதை அரசு வேடிக்‍கை பார்ப்பதா?

அண்ணா பல்கலைக்‍கழக விவகாரத்தில், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுவதை எடப்பாடி அரசு வேடிக்‍கை பார்ப்பதற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன், தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 'உயர் புகழ் கல்வி நிறுவனம்' என்ற அந்தஸ்தை வழங்கும் விஷயத்தில் மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த அந்தஸ்தை வழங்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என்று எழுத்துபூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிப்பதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல், துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.