கருத்து கணிப்புகளைத் தாண்டி தனி முத்திரை படைப்போம் - டிடிவி தினகரன்

நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் கழகத்தினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். கருத்துக்கணிப்புகளைத் தாண்டி கழகம் தனி முத்திரை பதிக்கப் போகிறது என்றும், போலிகளை அடையாளம் காட்டி புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான வழித்தோன்றலாகப் பிரகாசிக்கப் போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்களாம் உடன்பிறப்புகளுக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள மடலில், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாக இருப்பதாகவும், தேர்தல் களத்தில் தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்புக்கான பலன், நமது இயக்கத்திற்கு கிடைக்கவிருப்பதாகவும், தமிழக மக்களின் மனங்களில் நமக்கென்று தனியிடம் இருப்பது உறுதியாகப் போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கணிப்புகளைத் தாண்டி நம்முடைய கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறவிருக்கிறது - வாரியிறைக்கப்பட்ட பண மூட்டைகளையும், வாக்குறுதிகள் என்ற பெயரில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பொய் மூட்டைகளையும் கடந்து நாம் அழுத்தமான முத்திரையைப் பதிக்கப் போகிறோம்.

வேஷம் கட்டி மக்களை ஏமாற்றிய போலிகளை அடையாளங்காட்டி, புடம் போட்ட தங்கமாக, புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான வழித்தோன்றலாக நம்முடைய கழகம் பிரகாசிக்கப்போகிறது - நம் இலட்சியத்தை அடைந்து, அம்மாவின் மக்கள் நலக்கொள்கைகளை உயர்த்திப் பிடித்து, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற தனிப்பெரும் சக்தியாக நாம் எழுந்து நிற்கப் போகிறோம் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அத்தகைய மகத்தான வெற்றியை உறுதி செய்ய, நாளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கிற கழக கண்மணிகள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் - எந்தவிதமான கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காமல், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரையிலும் கழக முகவர்கள் அந்தந்த மையங்களில் இருந்திட வேண்டும் - எந்தச் சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் போக்கு மாறலாம் - அதனால் சிறிய கவனப்பிசகோ, மனச்சோர்வோ, சுணக்கமோ ஏற்பட்டால் கூட அது நமது வெற்றியைச் சேதப்படுத்திவிடும் - தேர்தல் களத்தில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக பணியாற்றியதைப் போலவே எதற்கும் இடம் கொடுத்துவிடாமல் வாக்கு எண்ணிக்கையிலும் கொள்கை காத்திடும் செயல்வீரர்களாக உறுதியோடு நின்றிட வேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறபடி கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் சரியாக கடைபிடித்திட வேண்டும் - தங்களின் பாதுகாப்பும், குடும்பத்தாரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிடக்கூடாது - கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு கடுமையாக இருக்கிற நேரத்தில், ஒழுங்காக முகக்கவசம் அணிவது, போதுமான சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் - வாக்கு எண்ணிக்கை பணிக்கான முக்கியத்துவத்தைப் போன்றே உங்கள் ஒவ்வொருவரின் உடல் நலனும் முக்கியமானது.

தமதருமை கழக கண்மணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், நம்முடைய இலக்கினை வென்றெடுத்து வாகை சூடினோம் என்பதே தமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிற செய்தியாக இருக்கும் - புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான பிள்ளைகளாக நின்று அத்தகைய சாதனையை நிகழ்த்திக்காட்டி புதிய சரித்திரம் படைத்திடுவோம் என்று கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.