புரட்சித்தலைவர் 104-வது பிறந்தநாள் - டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்

புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி, வரும் 17ம் தேதி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், எளிய மக்களின் இதய நாயகர், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஏழைகளின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர், சாதாரண மக்களின் மேம்பாட்டிற்காகவும், அனைவரும் கல்வியில் உயர்வு பெறுவதற்காகவும் அற்புதமான திட்டங்களைக் கொண்டு வந்த பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள், வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணிக்கு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கு, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருப்பதாக, தலைமைக்‍கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்விற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்‍கள் என அனைவரும் போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வரும் 18ம் தேதி முதல், தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரச்சார கூட்டங்களையும், ஏழை-எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் கழகத்தினர் சிறப்புற நடத்திட வேண்டுமென தலைமைக்‍கழகம் கேட்டுக்‍கொண்டுள்ளது.

பட்டிதொட்டிகளில் எல்லாம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியினை மாவட்ட கழக செயலாளர்களும், மாவட்ட சார்பு அணி செயலாளர்களும் ஒருங்கிணைந்து நடத்திடுவதுடன், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்திட புரட்சித்தலைவரின் பிறந்தநாளில் உறுதியேற்றிடுவோம் என்றும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் தெரிவித்துள்ளது.