தேவர் திருமகனாரின் 113-வது பிறந்த நாள், 58-வது குருபூஜை - டிடிவி தினகரன் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 113-வது பிறந்த நாள் மற்றும் 58-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இன்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக, இன்று காலை, புறப்பட்டுச் சென்ற, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, அபிராமம் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்‍கோயில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி, வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், திரளான பொதுமக்களும் திரு.டிடிவி தினகரனுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்குச் சென்ற திரு.டிடிவி தினகரன், தேவர் திருமகனார் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்‍கு, திரு.டிடிவி தினரகன் ஆராதனை செய்தார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், பெருந்திரளான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.