தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் - பாதிக்‍கப்பட்ட விவசாயிகளுக்‍கு இழப்பீடு வழங்குக

தொடர் மழையால் காவிரி டெல்டாவில் அறுவடைக்‍குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால், பாதிக்‍கப்பட்ட விவசாயிகளுக்‍கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஆயிரக்‍கணக்‍கான ஏக்‍கர் நெற்பயிர் சேதமடைந்துள்ளதால், பாதிக்‍கப்பட்டிருக்‍கும் விவசாயிகளுக்‍கு உரிய இழப்பிட வழங்க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என கேட்டுக்‍கொண்டுள்ளார்.

பருவம் தவறி பெய்து வரும் மழையால் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்‍கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்‍குத் தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்‍கருக்‍கும் அதிகமான சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாக செய்திகள் வருவதாக குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், கொரோனா பேரிடர் நேரத்திலும் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் இதனால் பெரும் பாதிப்புக்‍கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக கவனம் செலுத்தி சேத மதிப்பைக்‍ கணக்‍கெடுத்து விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - மேலும், மழைநீர் வடிகால்களை முறைப்படத்தி வயல்களில் தேங்கிக்‍ கிடக்‍கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும் - இதனைத் தாமதப்படுத்தினால் மழையால் சாய்ந்து கிடக்‍கும் பயிர்கள் மொத்தமாக அழுகிப்போய்விடும் - எனவே, முன்னுரிமை அடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்‍கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்‍கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளா். மேலும், விவசாயிகளுக்‍கு இழப்பீடு வழங்குவதற்கான நிதியை ஒதுக்‍குதுவதுடன், மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று நிதி பெறுவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.