திருவையாறில் 2ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - டிடிவி தினகரன் அறிவிப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்‍ கிடக்‍கும் நெல் மூட்டைகளை உடனடியாகக்‍ கொள்முதல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி திருவையாற்றில் நவம்பர் 2ம் தேதி மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள முக்‍கிய அறிவிப்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உரிய நேரத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாக மழையில் நனைந்து, சேதமடைந்து வருவதை சுட்டிக்‍காட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு நேரத்திலும் மிகுந்த இன்னல்களுக்கிடையே பாடுபட்டு விளைவித்த நெல்லினை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பழனிசாமி அரசு செயல்பட வேண்டுமென ஏற்கனவே கழகத்தின் சார்பில் வலியுறுத்தியிருந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனாலும், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மூடிமறைத்து பேட்டிகளை கொடுப்பதிலேயே முதலமைச்சரும், உணவுத்துறை அமைச்சரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என திரு. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

எனவே, டெல்டா விவசாயிகளின் துயரத்தை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக கழகத்தின் சார்பில் திருவையாறு, தேரடியில் வருகிற 2ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், டெல்டா மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து திரளாக கலந்துகொள்ளுமாறு கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேட்டுக்‍ கொண்டுள்ளார்.