கொரோனா ஊரடங்கு பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குக

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்‍கப்பட்டு விண்ணப்பித்துள்ள சாலையோர வியாபாரிகள் அனைவருக்‍கும் கடன் வழங்க வேண்டும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிக்‍கும்போது ஏற்பட்டுள்ள சிறு பிழையை பொருட்படுத்தாமல் விரைந்து கடன் வழங்குமாறும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா கால ஊரடங்கு காலத்தில், வர்த்தகம் செய்ய வாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு, கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்திலிருந்து 2 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் கீழ், ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதிலிருந்து கடன் வழங்க 44 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் - கடன் வழங்கத் திட்டமிட்டுள்ள தொகையே பத்தாயிரம் ரூபாய்தான் என்கிற நிலையில், கடந்த 5 மாதங்களில் 27 ஆயிரத்து 55 பேருக்குதான் கடன் வழங்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி வருத்தமளிப்பதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

கொரானாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிறு பிழைகள் ஏற்பட்டிருக்கலாம் - அதை பெரிதுபடுத்தாமல் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கடன் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழக அரசை திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.