பிரதமரின் திட்டத்திலும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை வேண்டும்

பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்துவதுடன், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருவதாகத் தெரிவித்துள்ளார்.

உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் வீடு கட்டிக் கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யப்பட்டுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய-மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.