8-ம் தேதி வரும் சின்னம்மாவை திருவிழாக்‍கோலம் பூண்டு வரவேற்போம்

சோதனை நெருப்பாறுகளைக்‍ கடந்து வரும் சின்னம்மாவை, திருவிழாக்‍கோலம் பூண்டு வரவேற்குமாறு, கழகத் தொண்டர்களுக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 10 ஆண்டுகளாக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தீயசக்தியான தி.மு.கவை, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலையெடுக்கவிடாமல் செய்கிற தலையாய பணியை, அம்மாவின் உண்மையான பிள்ளைகளான நம்மிடம் காலம் வழங்கியிருப்பதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், புரட்சித்தலைவி அம்மாவுக்‍காக, தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம் என குறிப்பிட்டுள்ளார். ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம் என அவர் சூளுரைத்துள்ளார்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்களாம் கழகத்தினருக்‍கு திரு.டிடிவி தினகரன் விடுத்துள்ள வேண்டுகோளில், அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக சிங்கம் போல நின்று, ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று சொல்லுமளவுக்குச் சரித்திர சாதனைகளைப் படைத்தவர் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா என திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய சிறப்போடு தமிழ் கூறும் நல்லுலகின் விளக்காக புரட்சித்தலைவி அம்மா ஒளி வீசிடுவதற்கு, தன்னையே உருக்கிக்கொண்டு உறுதுணையாக இருந்தவர் தியாகத்தலைவி சின்னம்மா - 33 ஆண்டுகள் அம்மாவின் தோழியாக, தாயாக, எந்த நிலையிலும் மாறாத அன்போடும், எதிரிகளுக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுக்காத விசுவாசத்தோடும் புரட்சித்தலைவியைக் காத்து நின்றவர் சின்னம்மா என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா இருந்தவரை அவரைத் தாங்கி நின்றதோடு மட்டுமின்றி, அம்மாவின் மறைவுக்குப் பிறகு, கடந்த 4 ஆண்டுகளாக அவருக்காக சிறைக்கொட்டடியில் துன்பங்களையும் தாங்கி தற்போது வெளியில் வந்திருக்கிறார் என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

அரசியலில் தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த புரட்சித்தலைவி அம்மா திட்டமிட்டு பழி தீர்த்திட, சட்டத்தின் பெயரால் தீய சக்தி கூட்டம் தீட்டிய சதித்திட்டத்தில், அம்மாவுக்கு பெரும் பலமாக இருந்த காரணத்தால் சின்னம்மாவையும் சிக்க வைத்தனர் - அந்த சிறுமதியாளர்களால் ஏற்பட்ட சோதனைகளில் இருந்தெல்லாம் இப்போது புடம் போட்ட தங்கமாக சின்னம்மா மீண்டெழுந்திருக்கிறார் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அவர் விடுதலையாகி தமிழகம் வருவதை புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத்தொண்டர்களும், சின்னம்மாவின் தியாகத்தை உணர்ந்த லட்சோபலட்சம் தமிழ்நாட்டு தாய்மார்களும், பெரியோர்களும் எதிர்பார்த்திருந்தார்கள் - ஆனால், கொரோனா தொற்று பாதிப்பினால் தொடர் சிகிச்சை மற்றும் சுய தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு, நம்முடைய தியாகத்தலைவி வரும் 8-ம் தேதி, திங்கட்கிழமை அன்று தமிழகம் திரும்புகிறார் - சின்னம்மா பூரண நலம் பெற்று தமிழகம் வருகிற அந்த நாளை திருவிழாவைப் போல கொண்டாட நாம் தயாராகி வருகிறோம் - நம்மோடு தமிழ்நாட்டு மக்களும் சின்னம்மாவை வரவேற்க காத்திருக்கிறார்கள் என திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய வரவேற்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாவற்றிலும் யாருக்கும், எந்தவித இடையூறும் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் - கர்நாடகாவில் உள்ள நம்முடைய கழகத் தொண்டர்கள், அம்மாநில காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரவேற்பு ஏற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என, கழகத் தொண்டர்களுக்‍கு திரு.டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே போல, தமிழக எல்லையில் தொடங்கி சென்னை வரை வழிநெடுகிலும் திரண்டு, சின்னம்மாவை வரவேற்க புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத்தொண்டர்கள் செய்து வரும் ஏற்பாடுகளைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன - அவற்றில் எல்லாம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன், சமூக இடைவெளி - முக கவசம் போன்றவற்றை மறந்திடக்கூடாது என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

மேலும் காவல்துறையினருக்கோ, போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்த இடத்திலும் தொந்தரவு ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் - வாகனங்களில் வருகிற கழக உடன்பிறப்புகள் திரும்பவும் ஊர் செல்கிற வரை மிகுந்த கவனத்தோடும், பாதுகாப்போடும் பயணம் செய்திட வேண்டியது அவசியம் - எல்லா வகையிலும் சின்னம்மா அவர்களுக்கோ, உங்கள் அன்புச் சகோதரனான எனக்கோ எந்தவொரு அவப்பெயரும் ஏற்படாதவாறு தங்களுடைய வரவேற்பை திட்டமிட்டுக் கொள்ளமாறு திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

ஏனெனில், நம்மைப் போன்றே தமிழ்நாட்டு மக்களும் சின்னம்மா அவர்களின் வருகையை பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள் - அவர்களின் ஆர்வம், நமக்கு பெரும் ஆதரவாக மாறும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும் - 10 ஆண்டுகளாக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தீயசக்தியான தி.மு.கவை, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலையெடுக்கவிடாமல் செய்கிற தலையாய பணியை, அம்மாவின் உண்மையான பிள்ளைகளான நம்மிடம் காலம் வழங்கியிருக்கிறது என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு நின்று தியாகத்தலைவியின் கரங்களை வலுப்படுத்தி, அம்மா கட்டிக்காத்த இயக்கத்தை, அம்மா காலத்து பொலிவுடன் மீட்டெடுத்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான தி.மு.கவை தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டும் என திரு. டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார். அந்த ஒற்றைக் குறிக்கோளில் ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அத்தனை பேரும் ஒன்றுபட்டு நிற்போம், புதிய சரித்திரம் படைப்போம் என கழகத் தொண்டர்களை திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.