மாணவர்களின் அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உண்மையை அரசு விளக்க வேண்டும்

நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே, அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும், பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருப்பதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்‍கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான AICTE அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அப்படி ஒரு கடிதமே தங்களுக்‍கு வரவில்லை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி? என்றும் திரு. டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே, அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும், பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருப்பதாக திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோடிக்‍கணக்‍கில் செலவழித்து பத்திரிகைகளில் விளம்பரங்களைக்‍ கொடுத்தும், ஊரெங்கும் சுவரொட்டி அடித்து ஒட்டிக்‍கொண்டதில் காட்டிய அக்‍கறையில் துளியையாவது மாணவர்களின் மீது செலுத்தி, அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்று தமிழக அரசு உடனடியாக விளக்‍க வேண்டும் என்றும், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.