மறைந்த ஜி.கே.அண்ணாதுரையின் குடும்பத்தினருக்கு நேரில் டிடிவி தினகரன் ஆறுதல்

தியாகத்தலைவி சின்னம்மாவின் உறவினர், திருமதி. இளவரசியின் சகோதரர் திரு.G.K. அண்ணாதுரை காலமானதை அடுத்து, திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் உள்ள அவரது இல்லத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

உடல்நலக்‍குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த திரு.அண்ணாதுரை, நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானுக்‍கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மாண்புமிகு அம்மா, கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக பதவி வகித்தபோது, அவரது மெய்காப்பாளர்களில் ஒருவராக திரு.அண்ணாதுரை செயல்பட்டார். கோட்டூர் ஒன்றியப் பெருந்தலைவராக பதவி வகித்த திரு.G.K. அண்ணாதுரை, கோட்டூர் தெற்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் உள்ள திரு.G.K. அண்ணாதுரையின் மனைவி மற்றும் மகன் பிரவீன் உள்ளிட்ட குடும்பத்தினரை, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி, திருவாரூர் மாவட்டச்செயலாளர் திரு.எஸ். காமராஜ், தஞ்சை தெற்கு மாவட்டச்செயலாளர் திரு.மா.சேகர், நாகை மாவட்டச்செயலாளர் ஆர்.சி.எம். மஞ்சுளா சந்திரமோகன் உட்பட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டக்‍கழக நிர்வாகிகள் பலரும் மறைந்த திரு. அண்ணாதுரை உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.