அண்ணாவின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்போம்!அம்மாவின் ஆட்சியை அமைப்போம்!

எந்நாளும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருந்து நம்மை வழிநடத்தும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு.. 

கூட்டமாக கூடுவது நோய்த்தொற்றுக்கான வாய்ப்பாக மாறிவிடக்கூடாது என்பதிலும் கழக உடன்பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் மூலமாக பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் நாம் மிக உறுதியாகவே இருக்கிறோம். 

சிலரைப்போல எல்லாவற்றிலும் அரசியல் செய்வது, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கூட வாக்கு கணக்கைப் பற்றியே எண்ணுவது போன்ற அழுக்கு சிந்தனைகள் நமக்கு எப்போதுமே இருந்ததில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

அதேநேரத்தில் தமிழகத்தின் உரிமைக்கான குரலை ஓங்கிஒலிப்பதிலும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதிலும் எப்போதும் நாம் சமரசம் செய்து கொண்டதில்லை.

ஊரடங்கு காலத்தில் எனது அன்பு வேண்டுகோளை ஏற்று ஏழை, எளிய மக்களுக்கு கழகத்தினர் உதவியதையும், இன்றளவும் உதவி வருவதையும் யாராலும் மறுக்க முடியாது.

‘இன்னும் 8 மாதங்களில் நாங்களே ஆளுங்கட்சி’ என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் தீயசக்தியான தி.மு.க.வை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விடாமல் செய்கிற ஆற்றல் அம்மாவின் உண்மையான பிள்ளைகளான நமக்குத்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நேரம் நெருங்குகிறது. 

அவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்கான உறுதி ஏற்கும் தினமாக அண்ணாவின் பிறந்தநாளை அமைத்துக்கொள்வோம். அன்றைய தினத்தில் கழக அமைப்பு ரீதியான அனைத்து பகுதிகளிலும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். 

எப்போதும், என் கண்மணிகளாக நான் நேசிக்கும் கழகத்தினர் அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் கழகப் பணியினையும், மக்கள் பணியையும் சிறப்போடு ஆற்றிடுவது மிக முக்கியம். இந்நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்திடுவது அவசியம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்போம்! புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் அமைப்போம்!