அமமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வாக்‍கு சேகரிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும், தங்கள் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். கழக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் செல்லும் இடமெல்லாம் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், தலைமை நிலைய செயலாளருமான திரு.சி.சண்முகவேலுவுக்‍கு, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், திரைப்பட நடிகருமான திரு.ரஞ்சித், கிராம மக்களிடம் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் சேர்ந்து, கழக தொண்டர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில், அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் திரு.பா.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம், சுந்தரபாண்டி, காமராஜ் நகர், எய்தனூர், குச்சிப்பாளையம், பல்லவராயன் நத்தம், பாலூர், தொட்டி குயிலாப்பாளையம், நேசனூர், அருங்குணம் ஆகிய பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் திரு.சிவக்கொழுந்து தீவிர வாக்கு சேகரித்தார். தேமுதிக வேட்பாளருடன், அமமுக பண்ருட்டி நகரச் செயலாளர் பூக்கடை திரு.சக்திவேல், தேமுதிக நகரச் செயலாளர் திரு.அக்பர் அலி ஓவைசி, மாவட்ட தலைவர் சவுக்கத் அலி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திருமதி.அ.விசாலாட்சி, நஞ்சப்பா மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி ஈடுபட்டவர்களிடமும், விளையாட்டு வீரர்களிடமும் பிரசுரங்களை வழங்கி, குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கே.வி.ஆர்.நகர், கொடிக்கம்பம், பாரப்பாளையம், அய்யன் நகர், செல்லம் நகர் உள்ளிட்ட இடங்களிலும் அவர் வாக்கு சேகரித்தார்.

ராமநாதபுரம் தொகுதி கழக வேட்பாளர் திரு.ஜி.முனியசாமி, திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட 12 ஊராட்சிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கழக வேட்பாளர் சென்ற இடங்களில் எல்லாம், மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.வ.து.ந.ஆனந்த், திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். கழக வேட்பாளருடன் நிர்வாகிகளும், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடன் சென்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளரும், கழக இளைஞர் பாசறை செயலாளருமான திரு.ஜெ.கொ.சிவா, ஜெயங்கொண்டம் நகரில் மேலகுடியிருப்பு, செங்குந்தபுரம், அம்பேத்கர் நகர், சின்னவளையம், கரடிக்குளம், அண்ணா சிலை மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அரியலூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் துரை.மணிவேல், தொகுதிக்குட்பட்ட திருமானூர் கிழக்கு ஒன்றியத்தில், சாத்தமங்கலம், கள்ளூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, வண்ணம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக பொருளாளருமான திரு.ஆர்.மனோகரன், பெரிய கடை வீதி, கள்ளர் தெரு, சந்து கடை, சீனிவாச பெருமாள் அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அ.ம.மு.க. வேட்பாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சேர்ந்து வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை ஆதரித்து, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, தொகுதிக்குட்பட்ட கயத்தாறு யூனியனை சேர்ந்த 14 கிராமங்களில் மக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக திருமதி.சீனி செல்வி போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட மேலக்கரந்தை, கீழகரந்தை, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். முன்னதாக, மேலகருவில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.