மாண்புமிகு அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட சபதம் ஏற்போம்

மாண்புமிகு அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட சபதம் ஏற்போம் என, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் 4-ம் ஆண்டில் கால் பதிப்பதையொட்டி தொண்டர்களுக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண மூட்டைகளுடன் வரும் துரோக சக்திகளையும், மக்களைச் சுரண்டும் நோக்கத்துடன் வரும் தீய சக்தியையும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், தொண்டர்களுக்‍கு எழுதியுள்ள மடலில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்களாம் பாசமிகு கழகத்தினருக்‍கு அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்‍கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்த லட்சோபலட்சம் தொண்டர்களின் உணர்ச்சிப் பிரவாகத்திற்கு இடையே, நியாயத்தின் பேரொளியாக, அதர்மத்தை வீழ்த்தும் சக்தியாக அம்மா கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிகரமாக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அசைக்க முடியாத ஆளுமைத் திறனோடும், அசாத்தியமான துணிச்சலோடும் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து, அம்மா கட்டிக்காத்த இயக்கத்தை, அவர் உருவாக்கிய ஆட்சியை தனிப்பட்ட ஆதாயங்களுக்காக துரோகிகள் அடகு வைத்தபோது, அதைக் காணச் சகிக்காமல் அம்மாவின் உண்மைத் தொண்டர்களிடம் ஏற்பட்ட உள்ளக்குமுறலின் வெளிப்பாடுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தனது ஆருயிர் நண்பன் மேலூர் ஆர்.சாமிக்கு சொந்தமான இடத்தில், அம்மாவின் திருவுருவத்தைத் தாங்கிய கொடியை ஏற்றிவைத்து, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அன்று, அம்மாவின் திருப்பெயரால் அமைந்த இந்த இயக்கம் முகிழ்த்து எழுந்ததாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். பணம், பதவி போன்றவற்றை துச்சமென மதித்து, அம்மாவின் கொள்கைகளைக் காப்பதும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்து தமிழ் மக்களின் நலனைப் பேணுவதுமே தலையாயக் கடமை என்ற உறுதியோடு களமிறங்கிய நமது பயணத்தில், மேலூர் சாமி தொடங்கி செயல்வீரன் வெற்றிவேல் வரை பலரை நாம் இழந்திருக்கிறோம் என தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், கொள்கைப் பிடிப்புக்கொண்ட அவர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்ற நம் எல்லோரின் நம்பிக்கையையும் செயல் வடிவத்துக்கு கொண்டுவர வேண்டிய இந்த நேரத்தில் நமது இயக்கத்தின் தொடக்க நாளும் அமைந்திருப்பது ஒருவகையில் பொருத்தமானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் கடந்து வந்த இந்த மூன்று ஆண்டுகளில் சந்தித்த சோதனைகள் எண்ணிலடங்காதவை -பணத்தாசையையும், பதவி ஆசையும் காட்டி நம்மை பலவீனப்படுத்த நினைத்த துரோகிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், உறுதியோடு களத்தில் நின்று நமது இயக்கத்திற்கு உறுதியான அடித்தளமிட்ட உங்களின் உழைப்பையும், தியாகத்தையும் என் வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் எண்ணிப்பார்த்து மகிழ்வேன் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடும் சோதனைகளுக்கு இடையிலும் நீங்கள் காட்டிய உறுதியையும், உழைப்பையும் அடையாளப்படுத்த இரண்டு நிகழ்வுகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நமது துரோகிகளும், எதிரிகளும் சேர்ந்து ஓர் அடையாளத்தோடு, நாம் தேர்தல் களத்தை சந்தித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, சதி செய்து பல விஷயங்களில், பல தளங்களில் செயல்பட்டதை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்பிறகு ஒரு பொதுச் சின்னத்தை பெற்ற பிறகும்கூட, அரசியல் கட்சியின் சின்னமாக அதைக் கருதக் கூடாது என்று சொல்லப்பட்டதால், நாம் எத்தகைய சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது என்பதை நன்கறிவோம் - ஆனாலும்கூட அந்தத் தேர்தலில் சுமார் ஐந்தரை சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுத்தந்து, நமது இயக்கத்திற்கு அசைக்க முடியாத ஓர் அடித்தளத்தை நீங்கள் ஏற்படுத்தியதை நான் மறக்க முடியுமா? என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த இயக்கமே கரைந்து போய்விட்டது என்று எதிரிகள் எள்ளி நகையாடிய போது, அந்த விமர்சனத்தை தூள்தூளாக்கும் வகையில், நமது வாக்கு வங்கியை சராசரியாக சுமார் 15 சதவிகிதம் வரை உயர்த்திக் காட்டி, தன்னையும், இந்த இயக்கத்தின் அத்தனை தொண்டர்களையும் மகிழ வைத்த நிகழ்வு தன் நினைவைவிட்டு அவ்வளவு எளிதில் அகலுமா? என தெரிவித்துள்ளார். இப்படி எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், எந்த வகையில் அடக்குமுறையை ஏவினாலும் அதையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் என்று நீங்கள் தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் - இந்த நேரத்தில்தான், சவால்களை முறியடிக்கும் நமது திறமையை நிரூபிக்கும் இன்னொரு வாய்ப்பாக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நம் கண் முன்னால் நிற்கிறது என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

சூறாவளிக்குச் சாயாத சந்தன மரங்களாக இருக்கும் நம் இயக்கத்தின் ஒவ்வொரு தொண்டனும், நெஞ்சுரத்தோடு தேர்தல் களத்தில் இறங்கி எதிரிகளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் - ஆனாலும்கூட, இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், நம்மை மதித்து வருகிற கட்சிகளையும், ஒருமித்த மனநிலை மற்றும் கொள்கை கொண்ட கட்சிகளையும் இணைத்து ஓர் அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்குத் தெரியாதது அல்ல - அப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, பிற இடங்களில்தான் நாம் போட்டியிட வேண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை அளிக்கலாம் என்று நான் அறிவித்த நாள் முதலாக, உங்களிடையே உருவான எழுச்சி என்னை திக்குமுக்காடச் செய்தது என்பதுதான் நிஜம் - அந்தளவுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு செய்திருந்தீர்கள் - நீங்கள் எல்லோருமே தகுதியானவர்கள்தான் என்றாலும், யதார்த்தம் கருதி அவர்களிலிருந்து தொகுதிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பது கடினமான பணி மட்டுமல்ல, தன் மனதை கனக்க செய்யக்கூடியதும் கூட - அந்தளவிற்கு தொகுதிக்கு சுமார் 15 பேரிலிருந்து ஒருவரை மட்டும் தேர்வு செய்வது என்பது தனக்கும், நம் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கும் ஒரு சவாலாகவே இருந்தது என தெரிவித்துள்ளார்.

அந்த சவாலைக் கடந்து ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் சூழல், நமது பலம், எதிரியின் பலவீனம், கழகத்தின் நலன், தமிழகத்தின் நலன் என பல்வேறு விஷயங்களை ஒன்றிணைத்து ஆலோசித்து, வேட்பாளர் இறுதி பட்டியலை ஏகோபித்த முடிவோடு அறிவித்திருக்கிறோம் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற முடியாத, ஆனால் தகுதியும் திறமையும் வாய்ந்த மற்ற அனைவருக்கும் எதிர்காலத்தில் தொடர்ச்சியான பிற வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரியும் - ஆனாலும் அந்த உறுதியை, உண்மையை உங்களுக்கு மீண்டும் சுட்டிக்காட்டுவது தன்னுடைய கடமை - எதிர்கால நம்பிக்கையும், யதார்த்தமும் கலந்த இந்தச்சூழலை மனதில் வைத்தும், நிகழ்கால அரசியல் சூழ்ச்சிகளை வீழ்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தும், உடனடியாக நீங்கள் களமிறங்க வேண்டுமென்று இருகரம் கூப்பி அன்போடு கேட்டுக்கொள்வதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நிலவிய சூழல்போல் இல்லாமல், நமது வெற்றிச் சின்னமான, நமதுசின்னம் இதுதான் என்று நாடறிந்த சின்னமான 'பிரஷர் குக்கர்' சின்னம், சுமார் 2 மாதங்களுக்கு முன்பே எந்தவித சிக்கலுமின்றி நமக்கு ஒதுக்கப்பட்ட நல்ல சூழலை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தான் முன்பே குறிப்பிட்டபடி, மாண்புமிகு அம்மாவின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, தமிழ்நாட்டு நலன்கள் பறிபோவதை வேடிக்கைப் பார்த்து, தங்களின் சுயலாபத்திற்காக கட்சியை அடமானம் வைத்து, மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதையே பிரதான நோக்கமாக வைத்து செயல்பட்ட நமது துரோகிகள், பணமூட்டைகளோடு மக்களைச் சந்திக்க வருகிறார்கள் - இந்தத் தேர்தலோடு அந்த துரோக சக்திகள் காணாமல் போகும் அளவிற்கு, நமது பலத்தை அவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நிரூபிக்கும் வகையில் நமது வியூகமும், உழைப்பும் அமைய வேண்டும் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதைவிட முக்கியமாக, கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த சமயங்களில், தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மக்கள் விரோத, நம் மாநில விரோதத் திட்டங்களை அனுமதித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த தீயசக்தி தி.மு.க., 'ஆட்சியைப் பிடிப்போம்' என்ற கோஷத்தோடு மக்களைச் சந்திக்க வருகிறது - எத்தகைய துரோகங்களை தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்தோம் என்கிற வெட்கமே இல்லாமல், தாங்கள் ஆட்சியிலிருந்தபோது தமிழ்நாட்டை எப்படி வன்முறைக் காடாக்கினோம் என்கிற கூச்சமே இல்லாமல், நல்லாட்சி தருவோம் என்று வாயாற பொய் பேசி மக்களை ஏமாற்ற வந்திருக்கிறது தீயசக்தி தி.மு.க. - ஆனால் 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.க.வினர், இப்போது ஆட்சியில் அமரத் துடிப்பதே, அசுர வேகத்தில் அப்பாவி மக்கள் மற்றும் அரசின் செல்வத்தை அதிகாரப்பூர்வமாக சுரண்டத்தான் என்பது, அரசியல் அரிச்சுவடி தெரிந்த எல்லோருக்கும் நன்றாகவே புரியும் என கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தீய நோக்கம் கொண்ட இந்த உண்மைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி, தீயசக்‍தி தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்து, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் கனவை நனவாக்க நாம் அயராது உழைக்க வேண்டும் - இந்த துரோக சக்திகளையும், தீய சக்தியையும் ஒருசேர விரட்டியடித்து, புரட்சித்தலைவரின் கொள்கைகளை மையப்படுத்திய, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் துணிச்சலும், சுயமரியாதையும், எவருக்கும் அடிபணியாத ஆளுமையும் கொண்ட உண்மையான அம்மாவின் ஆட்சியை, நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைக்க, இந்த நல்ல நாளில் சபதமேற்போம்! - அதை நிறைவேற்றும் வகையில், நமது கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் அவரவர் சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம் என்று சூளுரைப்போம்! என குறிப்பிட்டுள்ளார்.

கண்துஞ்சாமல், சோர்வுக்கு இடம் கொடுக்காமல், உற்சாகத்தோடு உழைப்பைத் தொடங்குங்கள் - இதோ நானும் புறப்பட்டுவிட்டேன் - ஆங்காங்கே உங்களோடு இணைந்து மக்களைச் சந்திப்போம் - உண்மைகளை எடுத்துச் சொல்வோம் - வெற்றியை நமதாக்குவோம்! என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், கழகத் தொண்டர்களுக்‍கு தெரிவித்துள்ளார்.