வேதாரண்யம் அருகே அம்மா மினி கிளினிக் சேதம் - தொடரும் திமுகவினரின் அராஜகம்

சென்னையில் அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்டதுபோல், வேதாரண்யம் அடுத்த அவரிக்காடு கிராமத்தில் உள்ள அம்மா மினி கிளினிக்கை தி.மு.க.வினர் சேதப்படுத்திய மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அவுரிக்காடு கிராமத்தில் உள்ள பல்நோக்கு சேவை மைய கட்டிடத்தில் அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர் ஒருவரும் உதவியாளர் ஒருவரும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பணியாற்றி வரும் மருத்துவர் கிருஷ்ணன் கொரோனா பணி காரணமாக வேதாரணியம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இதனால் உதவியாளர் சபரிநாதன் மட்டும் அம்மா மினி கிளினிக்கில் பாதுகாவலராக இருந்து வருகிறார். மருத்துவர் இல்லாத காரணத்தால் மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க-வைச் சேர்ந்த சுதாகர் என்பவர், அம்மா கிளினிக்கின் முன்புறம் இருந்த டிஜிட்டல் பேனர் மற்றும் பெயர் பலகையை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் லலிதா, வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நேற்று அம்மா உணவகத்தில் புகுந்து தாக்‍குதல் நடத்திய தி.மு.க.-வினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அம்மா மினி கிளினிக்கை திமுக-வினர் உடைத்து சேதப்படுத்தியிருப்பது பொதுமக்‍கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.