திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியதற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்றும், தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.​டிடிவி தினரகன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிப்பதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர், அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.